Share

கோடிகளைக் கொடுக்கும் சந்தனம்


சந்தனத்தை பாதுக்காப்பது எளிது – வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்*

விலை உயர்ந்த மரங்களை காடுகளிலும் விவசாய நிலங்களிலும் வெட்டி கடத்துவது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது, எனினும் திருட்டு மற்றும் கடத்தலைத் தடுக்க வழிமுறைகளும் வளர்ந்து வருகிறது.

கஷ்டப்பட்டு வளர்க்கும் மரங்கள் களவு போய்விடுமோ என்ற சந்தேகமும் கவலையும் விவசாயிகளுக்கு வருவது இயல்புதான். எனினும் தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் சந்தன மர விவசாயிகளுக்கு நம்பிக்கை தவருவதாக உள்ளது. பாரம்பரியமாக சந்தன மரங்களை பாதுகாக்க முள்வேலி அமைத்தல், நாய் வளர்த்தல், அகழி வெட்டுதல் போன்றவை செய்யப்படுகின்றன, அதனோடு புதிய தொழில் நுட்பங்களையும் கடைபிடித்து விவசாயிகள் சிறப்பாக மரங்களை பாதுகாத்து வருகின்றனர்.

*இரும்பு வலை (Iron welding)*

கர்நாடகத்தில் பெண் விவசாயி ஒருவர் 8 ஏக்கரில் சந்தனம் வளர்த்து வருகிறார். அவர் 2 அங்குல இரும்புப்பட்டை பயன்படுத்தி சந்தன மரத்திற்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கியுள்ளார். சாதாரணமாக மரத்தை அறுத்தல் சத்தம் வராது, ஆனால் இரும்பு வளையத்தை அறுத்தால் பெரிய சத்தம் வரும் அதனால் நாம் உடனடியாக கண்டிறிய முடியும். மேலும் நாய் வளர்க்கிறார், சத்தம் வந்தால் நாய் வந்துவிடும், அவர்களும் உடனடியாக வந்து பார்க்க முடியும். மேலும் உயர் மின்விளக்கு மற்றும் கேமராவும் உள்ளது. இவர் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் செய்யாமல் சாதாரண முறையிலேயே 8 ஏக்கர் சந்தனத்தை பாதுகாக்கிறார்.

*மின்வேலி மற்றும் சூடான் முள் (Electric fence with Sudan thorn)*

தமிழகத்தில் ஒரு விவசாயி அவரது சந்தன தோப்பைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். வெளிப்பக்கத்தில் சூடான் முள் உள்ளது, மேலும் கண்காணிப்புக் கேமராவும் பொறுத்தியுள்ளார், இதனால் மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ளது. எனினும் இது சற்று அதிக செலவாகக்கூடியது என்பதால் வசதியான விவசாயிகள் மட்டும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

*அகழி மற்றும் சென்சார் (Trenches with sensors)*

30 ஏக்கரில் சந்தன மரம் வளர்த்துள்ள ஒரு விவசாயி நிலத்தை சுற்றி அகழி வெட்டியுள்ளார். அகழி இருப்பது தெரியாத வகையில் அதன் மேல் பரப்பில் புற்கள் இருக்கும். அந்த அகழியில் சென்சார்கள் உள்ளது. உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மட்டும் இந்த அகழி பாதையை அறிந்திருப்பாகர்கள், வேறு யாருக்கும் இதுபற்றித் தெரியாது. மரத்தை திருட யாராவது சென்றால் அந்த அகழியில் விழுந்துவிடுவார்கள். அப்படி யாராவது விழுந்து விட்டால் உடனடியாக சென்சார் மூலம் உரிமையாளருக்கு தகவல் வந்து விடும், மேலும் கேமராவும் உள்ளது.

*மரங்களில் சிப் & சென்சார் (Internet of things – IoT)*

சந்தன மரம் - Santhana Maram

தற்போது உள்ள மற்றொரு சிறந்த தொழில் நுட்பம் IoT based anti theft system (Internet of things-IoT) ஆகும். இந்த முறையில் மரங்களில் சிப் பொறுத்தப்படுகிறது, அதில் சென்சார்கள் உள்ளன. சிப்கள் இருப்பதை கண்டறியாத வகையில் ஒருவித உருமறைப்புடன் மரத்தின் தண்டுகளில் பதிக்கப்படுகின்றன. மரங்களை வெட்டும் போது, மேலும் மரம் அறுக்கும் எழும் சத்தத்தை சிப் சென்சார் செய்து தகவல் அனுப்பும். மரத்தை கடத்தினால் இருப்பிடத்தையும் காட்டிக் கொடுத்துவிடும்.

பெங்களூரில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனம் (IWST) ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதன் வளாகத்தில் உள்ள 50 சந்தன மரங்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, தவறு நடந்தால் எச்சரிக்கைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பப்படும், இந்த முறைகள் சந்தன மரத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா வகையான மரங்களுக்கும் பயன்படுத்த முடியும். இந்த தொழில் நுட்படத்தை குறைந்த விலையில் கொடுப்பதற்கான ஆய்வுகள் நடந்துவருகிறது. தற்போது மரத்திற்கான ஒரு சென்சார் விலை ரூ.1,000 வரை உள்ளது.

 

லாபம் தரும் சந்தன மர வளர்ப்பு!

*ப்ளு டூத் முறை (Bluetooth sensor)*

சந்தன மரங்கள் பாதுகாக்க மற்றொரு வழிமுறையாக உள்ளது. இந்த முறை சந்தன மரங்களைப் பாதுகாப்பதற்கான மின்சாரம் மற்றும் செலவு குறைந்த தீர்வாகவும் உள்ளது. சந்தன மரங்கள் நிலத்தில் தொகுப்பாக இருந்தாலும் பரவலாக இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். இந்த முறை கைபேசி வழியே செயல்படும், சந்தன மரத்திற்கான ஒரு பொறியை (application) நிறுவிக் கொண்டால் ப்ளூ டூத் மூலம் தகவல்கள் பெறப்படுகிறது. ஏற்கனவே ப்ரோக்கிராம் செய்யப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப தரவுகளை அனுப்பப்படும்.

*ரேடார் தொழில் நுட்பம் (Radar technology)*

சந்தன மரங்களை பாதுகாக்க இதுவும் ஒரு எளிய வழியாகும். சந்தன பண்ணையில் ரேடார் கருவிகளை பொருத்துவதன் மூலம், எந்த ஒரு வெளிப்பொருள் அல்லது வெளிஆள் உள்ளே வந்தாலும் சிக்னல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

*கிராம குழு (Village community)*

கிராத்தில் எல்லா விவசாயிகளும் சந்தன மரங்கள் வளர்க்கும் போது அவர்களுக்கு சரியான புரிதல் ஏற்படும். அவர்களை தவிர வேறு யாராவது புதியவர்கள் ஊருக்குள் வந்தால் விழிப்போடு இருக்க முடியும். மேலும் உள்ளூர் மக்களே ஒரு குழு அமைத்து பாதுகாப்பும் ஏற்படுத்த முடியும். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல கிராமங்களில் இந்த முறையிலேயே சந்தனம் மற்றும் செம்மரங்கள் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது, மரம் தங்கசாமி ஐயா அவர் வாழ்ந்த காலத்திலேயே இந்த முறையை உருவாக்கியிருந்தார்.

*நாய் வளர்த்தல் (Dog squads)*

மரங்களை பாதுகாக்க சந்தனத் தோப்பின் பரப்பளவிற்கேற்ப நாய்களை வளர்க்கலாம். மேலும் முள்வேலி அமைத்து, நிலத்தின் நடுவில் சந்தன மரங்களை நட்டு அதனைச் சுற்றி மற்ற டிம்பர் மரங்களை நடவு செய்யும்போது திருடர்கள் எளிதில் உள்ளே வந்து சந்தன மரங்களை வெட்ட இயலாது, மீறி உள்ளே வந்தாலும் நாய்கள் கண்டறிந்துவிடும்.

*சந்தன மரம் பாதுகாப்பு - அச்சுறுத்தாலா! சவாலா?*

சந்தனமர வளர்ப்பு விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தருக்கூடியதாக உள்ளது, எனினும் சந்தன மரத் திருட்டு ஒரு அச்சுறுத்தலாகவும் உள்ளது. பல பொருளாதார பிரச்சினைகளால் நலிந்து வரும் விவசாயிகள் சந்தன வளர்ப்பை ஒரு அச்சுறுத்தலாக பார்க்காமல் ஒரு சவாலாக பார்க்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மரங்களை நன்றாக பாதுகாக்க முடியும். மேலும் தற்போது நடவு செய்யப்படும் மரக்கன்றுகளில் சேகு உருவாக 10 ஆண்டுகள் ஆகும், அதற்குள் பல தொழில் நுட்பங்கள் மலிவான விலையில் வந்துவிடும்.