இமயமலை
இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். இது ஆசியாவில் அமைந்துள்ளது.
உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும்
இமயமலை மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டது. இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது. அவை பூடான் இந்தியா,நேபாளம்,சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகும். இதில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது.[2] இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.
இந்திய நிலத்திணிவு ஆசியாவுடன் மோதுமுன்னர் இடம்பெற்ற 6,000 கி.மீட்டருக்கு மேற்பட்ட அதன் பயணம். சுமார் 40 தொடக்கம் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.
நவீன டெக்டோனிக் கொள்கையின் படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம் .
வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.
இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும். இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன:
மேற்கு ஆறுகள் சிந்து படுக்கையில் இணைகின்றன. இவற்றில் சிந்து நதிதான் பெரிய நதி. சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் செல்கிறது . இந்நதி ஜீலம், செனாப், ரவி, பியாஸ், மற்றும் சட்லெஜ் ஆறுகளால் ஊட்டப்படுகிறது.
மற்ற இமாலய நதிகளின் கங்கா-பிரம்மபுத்ரா படுக்கைக்குச் செல்கிறது. இதன் முக்கிய நதிகள் கங்கை , பிரம்மபுத்ரா மற்றும் யமுனை . பிரம்மபுத்திரா மேற்கு திபெத்தில் யார்லுங் ட்சன்க்போ நதியாக உருவாகி கிழக்கு திபெத் மற்றும் அசாம் சமவெளி வழியாகப் பாய்கிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பங்களாதேசத்தில் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஆற்று படுக்கை வழியே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கிழக்கு இமாலய நதிகளின் கிழக்கு அயேயர்வாடி நதியை ஊட்டுகின்றன, இந்நதி திபெதில் உருவாகி தெற்கு நோக்கிப் பர்மா வழியாக அந்தமான் கடலில் கலக்கிறது.
சல்வீன்,மீகாங்,யாங்சே மற்றும் ஹுவாங் ஹி (மஞ்சள் ஆறு) திபெத்திய பீடபூமியில் உருவாகின்றன . ஆகையால் இவை உண்மையான இமயமலை ஆறு அல்ல. சில புவியியலாளர்கள் இவ் ஆறுகளை வெளிச்சுற்று இமாலய ஆறுகள் என்று அழைகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் குறைவு விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, பனிப்படல ஏரிகள் கடந்த சில தசாப்தங்களில் பூட்டான் இமயமலை பகுதியில் குப்பைகள் உள்ளடங்கிய பனிப்பாறைகளின் மேற்பரப்பில் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த விளைவு பல ஆண்டுகளாக உணரப்படாது என்றாலும் உலர் பருவங்களில் பணிப்பறைகளால் உருவாகும் ஆறுகளைச் சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பேரிழப்பு ஏற்படும்.
இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தினை மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாகச் செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.